Published : 09 Aug 2014 12:00 AM
Last Updated : 09 Aug 2014 12:00 AM

சங்ககாரா சதம்; இலங்கை பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக 3-வது நாளில் 46 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 199 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 140.5 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யூனிஸ்கான் 177 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ஜே.கே.சில்வா 38, சங்ககாரா 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

3-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ஜே.கே.சில்வா 114 பந்துகளிலும், சங்ககாரா 123 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். இலங்கை அணி 144 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் முகமது தல்ஹா. சில்வா 140 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து சங்ககாராவுடன் இணைந்தார் ஜெயவர்த்தனா. இவர் இந்த டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறவிருப்பதால் பிரம்மாண்ட வரவேற்புக்கு மத்தியில் களம்புகுந்தார். இருவரும் சிறப்பாக ஆட, மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

இதன்பிறகு இருமுறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது சிறப்பாக ஆடிய ஜெயவர்த்தனா 91 பந்துகளில் அரைசதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 49-வது அரைசதமாகும்.

“டிரிங்க்ஸ் பிரேக்கிற்கு” பிறகு தொடர்ந்து அபாரமாக ஆடிய சங்ககாரா 216 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 37-வது சதம் இது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 10 சதங்கள் அடித்த 7-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார் சங்ககாரா.

இதன்பிறகு மோசமான வானிலை காரணமாக 5 நிமிடங்களுக்கு முன்னதாக தேநீர் இடைவேளை விடப்பட்டது. இதையடுத்து கனமழை பெய்ததைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை அணி 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. சங்ககாரா 218 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 102, ஜெயவர்த்தனா 109 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

சங்ககாரா-ஜெயவர்த்தனா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஜோடி டெஸ்ட் போட்டியில் 18-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறது. சச்சின்-திராவிட் ஜோடி 20 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x