

சென்னை: அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி, இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இது எனது தனிப்பட்ட கருத்து. தொழில்முறை கிரிக்கெட் வட்டாரத்தில் நான் மைனாரிட்டி பக்கம் இருப்பேன் என்பதை அறிவேன். ஆடுகள தயாரிப்பாளர்களால் முடிந்த சிறந்த ஆட்ட களத்தை தயாரிக்க அவர்களுக்கு ஏன் நாம் வாய்ப்பு அளிக்கக்கூடாது? தொடரை நடத்தும் அணிக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது” என ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் சூழலுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என கேட்டு பெற்றதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இதுதான் இப்போது விவாத பொருளாகி உள்ளது. தொடரை நடத்தும் அணிகள் தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது வழக்கம். இது பல்வேறு முறை விவாதமாக எழுந்துள்ளது. இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.