வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ?

வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Updated on
1 min read

சென்னை: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் மேற்கொள்ள உள்ளன. 2018-க்கு பிறகு முகமது பின் சல்மான் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை.

இந்த சூழலில்தான் ட்ரம்ப்பை கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான ரொனால்டோ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சவுதி புரோ லீக் அணிகளில் ஒன்றான அல் நஸர் கால்பந்து கிளப் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். அந்த வகையில் அவரும் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உள்ள சவுதி குழுவின் இடம்பெற்றுள்ளதாக தகவல்.

அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்திக்க வேண்டும் என நேர்காணல் ஒன்றில் ரொனால்டோ ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த சந்திப்பு நடந்தால் அதிபர் ட்ரம்ப் வசம் பிரத்யேகமாக ஒன்றை தான் பகிர்வேன் என்றும் ரொனால்டோ அப்போது தெரிவித்திருந்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் விளையாட போர்ச்சுகல் அணி அண்மையில் தகுதி பெற்றது. இந்த தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இதுவரை இதற்கு 34 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. அதில் அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவேடார், பராகுவே, உருகுவே, அல்ஜீரியா, கேப் வர்டி, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொரோக்கோ, செனகல், தென் ஆப்பிரிக்கா, துனிசியா, ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா, தென் கொரியா, உஸ்பேகிஸ்தான், நியூஸிலாந்து உள்ளிட்ட தேசிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in