

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியும், கோவை பயோனியர் மில்ஸ் அணியும் மோதின.
இதில் மதுரை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று டாக்டர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்பி குரூப்ஸ் சேலஞ்சர்ஸ் கோப்பையை வென்றது. மதுரை அணிக்காக சூர்யா, பரத் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட கால் பந்து கழக தலைவர் ஜி.சுந்தர ராஜன், பள்ளித் தாளாளர் மரிய நாதன், செயின்ட் மேரி மாணவர் கழக பாதுகாவலர் எஸ்.கே.சி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.