32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி!

32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி!
Updated on
1 min read

தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது.

கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று இந்தியா-ஏ மற்றும் யுஏஇ அணிகள் இந்த தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்திருந்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். 32 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார்.

இந்தியா-ஏ அணியின் கேப்டனான ஜிதேஷ் சர்மா, 32 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய யுஏஇ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 148 ரன்களில் இந்தியா-ஏ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி வென்றார். இந்தியா-ஏ அணி இந்த தொடரின் அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அன்று பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in