

பெங்களூரு: இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் விளாசினார்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறியது. ஜோர்டான் ஹர்மான் 26, லெசெகோ செனோக்வானே 0, ஜுபைர் ஹம்சா 8, டெம்பா பவுமா 0, கானர் எஸ்டெர்ஹுய்சென் 0, டியான் வேன் வூரன் 6, கைல் சைமண்ட்ஸ் 5, பிரேனலன் சுப்ராயன் 20, ஒகுஹ்லே செலே 0 ரன்களில் நடையை கட்டினர்.
ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்த போதிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மார்க்வெஸ் அக்கர்மேன் 118 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் விளாசிய நிலையில் கடைசி பேட்ஸ்மேனாக ஹர்ஷ் துபே பந்தில் வெளியேறினார். முடிவில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 47.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, முகமது சிராஜ் 2, ஆகாஷ் தீப் 2 விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். 34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது.
அபிமன்யு ஈஸ்வரன் 0, தேவ்தத் படிக்கல் 24, சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.