அமோல் முஜும்தார்: உலகக் கோப்பையை இந்திய மகளிர் படை வென்றிட வைத்த வித்தகர்!

அமோல் முஜும்தார்: உலகக் கோப்பையை இந்திய மகளிர் படை வென்றிட வைத்த வித்தகர்!
Updated on
2 min read

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நெடுநாள் கனவு இப்போது மெய்ப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை நெருங்கி வந்து இதற்கு முன்னர் இரு முறை வாய்ப்பை தவறவிட்ட இந்திய மகளிர் அணி, இம்முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் பின்னணியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் உள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் விளையாடாத வீரரான அவர், இந்திய மகளிர் அணியை சாம்பியன் ஆக்கியது எப்படி என்பதை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

உள்ளூர் கிரிக்கெட் லெஜெண்ட்: 50 வயதான அமோல் முஜும்தார் மும்பையில் பிறந்தவர். கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர். 19 வயதில் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் 260 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அதன் மூலம் மும்பையில் இருந்து புறப்பட்ட அடுத்த பேட்டிங் ஆளுமையாக அவர் அறியப்பட்டார்.

வலது கை பேட்ஸ்மேனான அவர், 171 முதல் தர போட்டியில் விளையாடி 11,167 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 48.13. இதில் 30 முறை சதம் கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்ற மும்பை அணியில் விளையாடிய சக வீரராக இருந்தவர். 1994-ல் இந்திய இளையோர் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டவர். இந்திய - ஏ அணிக்காக சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் திராவிட் உடன் இணைந்து விளையாடியவர்.

உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான முறையில் விளையாடி, ரன் சேர்த்த போதும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை அவர் ஏனோ பெறவில்லை. அசாம் மற்றும் ஆந்திர அணிக்காகவும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். களத்தில் வீரராக சுமார் 20 ஆண்டுகள் செலவிட்டு பிறகு 2014-ல் தனது ஓய்வை அறிவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் பயிற்சியாளராக தனது பயணத்தை தொடங்கினார். இந்திய இளையோர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர், நெதர்லாந்து அணியின் பேட்டிங் ஆலோசகர், ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர், தென் ஆப்பிரிக்க அணியின் இடைக்கால பேட்டிங் பயிற்சியாளர், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணியின் பயிற்சியாளர் என கிரிக்கெட்டில் அவரது அடுத்த இன்னிங்ஸ் அமைந்தது.

இந்நிலையில்தான், கடந்த 2023-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அமோல் முஜும்தாரை நியமித்தது பிசிசிஐ.

எப்போதும் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களால் முடியாததை தங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என விரும்புவார்கள். அமோல் முஜும்தாரின் கனவும் கிட்டத்தட்ட அப்படித்தான். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு இல்லையென்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்து அவர் அசத்தி உள்ளார்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா, ஸ்ரீ ஷரணி, அமன்ஜோத் கவுர் என இந்திய அணியில் இடம்பெற்ற அனைத்து வீராங்கனைகளையும் சரியாக பயன்படுத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார் அமோல் முஜும்தார்.

கிரிக்கெட் அணியில் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் இடையிலான புரிதல் சுமுகமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அணியால் வெற்றி பெற முடியும். அதில் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் வெற்றி பெற்றுள்ளார். ‘இந்த வெற்றி தலைமுறைகள் பல கடந்து நிற்கும்’ என இந்திய அணியை அவர் போற்றியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து உடனான ஆட்டத்தை 4 ரன்களில் இந்தியா இழந்தது. இந்த ஆட்டத்துக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த விவாதத்தில் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் பேசியுள்ளார். அப்போது அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் நேர்மறை எண்ணத்தை கடத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

அதன்பின்னர் இந்திய அணி புது உத்வேகம் பெற்று, விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வாகை சூடி உலக சாம்பியன் ஆனது. ஒரு வீரராக இந்திய அணியிடம் இடம்பெற முடியாமல் போனவர், இன்று தலைமைப் பயிற்சியாளராக இந்திய மகளிர் அணி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கி சாதித்துள்ளார் அமோல் முஜும்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in