Women’s WC Final | தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

Women’s WC Final | தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
Updated on
2 min read

மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச முடிவு செய்தார்.

இந்திய அணிக்காக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன் குவித்தது. அதற்கடுத்த சில ஓவர்களில் பவுண்டரி பதிவு செய்ய முடியாத வகையில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் பந்து வீசி இருந்தனர்.

ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்துக்கு வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் இணைந்து 62 ரன்கள் கூட்டணி அமைத்தார் ஷபாலி. 78 பந்துகளில் 87 ரன்கள் அவர் ஆட்டம் இழந்தார். ஜெமிமா 24 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்களிலும், அமன்ஜோத் கவுர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் தீப்தி சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியினர் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

6-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் தீப்தி சர்மாவும், ரிச்சா கோஷும். 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ரிச்சா ஆட்டமிழந்தார். தீப்தி 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ராதா யாதவ் 3 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட் வீழ்த்தினார். லாபா, குளோ டிரையான், நடின் டி கிளர்க் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 299 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களில் இந்தியாவின் இந்த 298 ரன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ல் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 356 ரன்கள் எடுத்திருந்தது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை இரண்டாவதாக பேட் செய்து தோல்வியை தழுவியதில்லை. இருப்பினும் அந்த இலக்குகள் அனைத்தும் சுமார் 230 முதல் 250 ரன்கள் என் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓவருக்கு 5.98 ரன்கள் வீதம் தென் ஆப்பிரிக்க அணி இலக்கை விரட்டுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு களத்தில் பீல்டிங் முக்கியமானதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா, குளோ டிரையான், நடின் டி கிளர்க் ஆகியோரின் விக்கெட்டை இந்தியா கைப்பற்ற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in