சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வில்லியம்சன் ஓய்வு!
Updated on
1 min read

சிட்னி: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான அவர், நியூஸிலாந்து அணிக்காக 93 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2011-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளையாடி இருந்தார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, 2021 டி20 உலகக் கோப்பை இறுதி, 2016 மற்றும் 2022 அரையிறுதி ஆட்டத்திலும் விளையாடி இருந்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,575 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 18 அரை சதங்கள் அடங்கும். 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 85 ரன்கள் எடுத்திருந்தார்.

“அணியுடன் நான் பெற்ற அனுபவங்களும், இந்த நீண்ட பயணத்தின் நினைவும் இனிதானது. நான் ஓய்வு பெற இது சரியான தருணம் என கருதுகிறேன். இது எனக்கும், அணிக்கும் நல்ல முடிவாக அமையும் என நம்புகிறேன். ஏனெனில், அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான அணியை கட்டமைப்பது அவசியம். டி20 கிரிக்கெட்டில் திறன் படைத்த வீரர்கள் பலர் இதில் வாய்ப்பு பெறுவார்கள். அவர்கள் உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாக இது உதவும்” என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் தொடர்ந்து விளையாடுவார். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாத வில்லியம்சன், உலக அளவில் நடைபெறும் பல்வேறு லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in