கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு
Updated on
1 min read

மெல்பர்ன்: பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார். கடந்த 28-ம் தேதி பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து பென் ஆஸ்டினின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. இதனையடுத்து அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (30-ம் தேதி) பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பயிற்சியின் போது பென் ஆஸ்டின் தலைக் கவசம் அணிந்திருந்தார். இருப்பினும், கழுத்துப் பகுதியில் பந்து படாமல் தடுக்கும் பட்டை அந்த தலைக்கவசத்தில் இல்லை. அதன் காரணமாக இந்த சோகம் நேர்ந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸுக்கு காதுப் பகுதிக்கு அருகே பந்து பலமாக பட்டதால், சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தை நினைவூட்டுவது போன்று பென் ஆஸ்டினின் உயிரிழப்பு அமைந்தது. அவரது இறப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்டின் பென்னுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவிமும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தின் போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in