இது ஆரம்பம்தான்... கபடியில் சாதிக்கும் கண்ணகி நகர் கார்த்திகா!

இது ஆரம்பம்தான்... கபடியில் சாதிக்கும் கண்ணகி நகர் கார்த்திகா!
Updated on
2 min read

சென்னை: பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ‘கில்லி’யாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார்.

கண்ணகி நகரை சேர்ந்த பலரும் இன்று கார்த்திகாவின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள். எளிய குடும்ப பின்புலத்தை சேர்ந்த அவரின் விடாமுயற்சியும், வெற்றிக்கதையும் உத்வேகம் அளிக்கக் கூடியது.

சென்னை - கண்ணகி நகரில் குடும்பத்துடன் வருகிறார் கண்ணகி நகர் கார்த்திகா. வீட்டுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்த அவருக்கு 12 வயதில் கபடி விளையாட்டின் மீது பற்று வந்துள்ளது. அந்த ஆர்வத்தை அவர் இறுகப்பற்றிக் கொள்ள, அவரது பெற்றோர் ஊக்கம் தந்துள்ளனர். ஆரம்ப நாட்களில் தங்கள் மகளின் கபடி பயணத்துக்கு தங்கள் வசம் இருந்து நிதியை கொண்டு அவர்கள் உதவி உள்ளனர்.

கார்த்திகாவின் ஆர்வத்துக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் பயிற்சியாளர் ராஜி உதவியுள்ளார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளை கொண்டு ஒரு கபடி அணியை அவர் உருவாக்கியுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட கார்த்திகா, எதிரில் இருந்த தடைகளை மூச்சுப் பிடித்து, முட்டி மோதி முன்னேறி இப்போது தேசத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார். இப்போது முதல்வர், துணை முதல்வர் என அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தமிழக முதல்வர் தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கார்த்திகா, தேசிய அளவிலான SGFI, Khelo India மற்றும் Federation Nationals உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டுக்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்ற சிறப்புடைய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.

மேலும், அவர் 5 முறை தமிழ்நாடு அணியின் அணித் தலைவராக (Captain) பொறுப்பேற்று அணியை வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இளையோர் பெண்கள் இந்திய கபடி அணியின் துணை அணித் தலைவராக செயலாற்றி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தும் சிறப்பான தலைமைத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

“நான் கண்ணகி நகர் ஆளு. எங்கள் பகுதி மக்கள் மீதுள்ள குற்றப் பின்புலம் கொண்டவர்கள் என்ற அடையாளத்தில் இந்த வெற்றி உடைக்கும் என நம்புகிறேன். கண்ணகி நகரில் உள்ள அனைவரும் கடின உழைப்பாளிகள், உழைக்கும் வர்க்கத்தினர். இந்த வெற்றியை எனது பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் எங்கள் பகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என சென்னை திரும்பிய கார்த்திகா தெரிவித்தார். அவருக்கு கண்ணகி நகர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெண்பிள்ளைகள் பலரும் விளையாட்டில் சாதிக்க தங்கள் மகளின் வெற்றி உதாரணமாக இருக்கும் என கார்த்திகாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ‘விளையாட்டுக் களத்தில் இந்த வெற்றி கார்த்திகாவின் தொடக்கம்தான். இன்னும் பல மைல்கற்களை அவர் எட்டுவார்’ என அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in