

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக், தனி ஒருவராக போராடி 101 பந்துகளில் 135 ரன்கள் விளாசி சரிவில் இருந்த தன் அணியை மீட்டார். இருப்பினும் இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் விளையாடின. இந்நிலையில், தற்போது இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சூழலில் இருந்து அணியை மீட்டார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக். 101 பந்துகளில் 135 ரன்களை அவர் விளாசினார். 9 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அவருக்கு உறுதுணையாக ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இவர்களில் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் ரன் ஏதும் எடுக்கவில்லை.
35.2 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதில் 17 ரன்களை உதிரிகளாக கொடுத்திருந்தது நியூஸிலாந்து அணி. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. இந்த இலக்கை சுலபமாக நியூஸிலாந்து எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் என்று தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இணைந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. மிட்செல் 78 ரன்கள், பிரேஸ்வெல் 51 ரன்கள் எடுத்தனர். இறுதிவரை மிட்செல் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 36.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இத்தொடரில் 1-0 என நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.