

சென்னை: தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் 6-வது ஜூனியர் மற்றும் 11-வது சீனியர் மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல்குள பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.
50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் அதிகாலை 6.30 மணிக்கே நீச்சல்குளத்திற்கு வரவேண்டும் எனவும், 7 மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை முடிந்தபின்னர் 9 மணிக்கு எந்தெந்த பிரிவுகளில் வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது வகைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மழையையும் பொருட்படுத்தாதுதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் தங்களது பெற்றோருடன் காலை 6 மணி முதலே நீச்சல்குள வளாகத்துக்கு வரத்தொடங்கினர். ஆனால் அவர்களை, அங்கு ஒருங்கிணைப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் ஏதும் போட்டி அமைப்பாளர்களால் செய்யப்படவில்லை. அவர்கள் கூறியபடி சான்றிதழ் சரிபார்ப்புகள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை குறித்த நேரத்தில் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையே மழையும் குறுக்கிட்டதால் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐ.டி. கார்டு வழங்குவதிலும் தாமதம் நிலவியது. இதற்கு அங்கு வைக்கப்பட்டிருந்த பிரிண்டர் பழுதானதாக காரணம் கூறப்பட்டது. நேரம் செல்லச் செல்ல போட்டியில் பங்கேற்க வந்திருந்த பாரா நீச்சல் வீரர்கள் சோர்வடையத் தொடங்கினார்கள்.
ஒருவழியாக மாலையில் போட்டியை தொடங்கினார்கள். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்த வேண்டியது இருந்ததால் அவசரகதியில் வீரர்களை அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்கச் செய்தனர். இதனால் அவர்களால் போதிய திறனை வெளிப்படுத்த முடியாமல் போனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பாரா நீச்சல் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் கூட இன்றைய போட்டி காலதாமதமாக நடத்தப்பட்டதால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இது வீரர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் மன வேதனை அடையச் செய்தது.