

சென்னை: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் கேரள வருவது தள்ளிப் போயுள்ளது. ஆஸ்திரேலிய அணி உடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் வருவதாக கேரள அரசு, இந்த போட்டியின் ஏற்பாட்டாளர், அர்ஜெண்டினா அணி தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது. மெஸ்ஸியும் இதை அண்மையில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டி பிஃபாவின் நட்புரீதியிலான சர்வதேச அணிகளுக்கான அடுத்த அட்டவணையில் நடைபெறும் என போட்டியை ஏற்பாடு செய்துள்ள ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஆண்டோ அகஸ்ட்டின் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனுமதியை பிஃபா தரப்பில் இருந்து பெறுவதற்கு காலதாமதமாகி வருவதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்ஜெண்டினா கால்பந்து அணி நிர்வாகத்துடன் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொச்சியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அர்ஜெண்டினா அணி கேரளாவில் விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் அறிவித்தார். அப்போது முதலே திட்டமிட்டப்படி அர்ஜெண்டினா அணி இந்த போட்டியில் விளையாடுவதில் குழப்பம் நீடித்தது. கேரள அரசு தரப்பு, போட்டியின் ஏற்பாட்டாளர், அர்ஜெண்டினா அணி நிர்வாகம் முரணான கருத்தை மாறி மாறி தெரிவித்தது இதற்கான அடிப்படையாக அமைந்தது.
வரும் டிசம்பரில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு மெஸ்ஸி வர உள்ளதாக தகவல். அந்த பயணத்தில் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு அவர் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் இந்தப் பயணத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.