

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, கனடாவின் விக்டோரியா எம்போகோவுடன் மோதினார். இதில் ரைபகினா 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
2022-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ரைபகினா, அரை இறுதி சுற்றில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பான் பசிபிக் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் உலகத் தரவரிசையில் 8-வது இடத்துக்கு முன்னேறி அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் கலந்துகொள்வதற்கு கடைசி வீராங்கனையாக தகுதி பெற்றுள்ளார் எலெனா ரைபகினா.
இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்துவார்கள். அந்த வகையில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக், கோ கோ காஃப், அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் தற்போது எலெனா ரைபகினாவும் இணைந்துள்ளார்.