

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 109 ரன்களும், பிரதிகா ராவல் 122 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்களும் விளாசி அசத்தினர்.
மழை குறுக்கீடு காரணமாக 44 ஓவர்களில் 325 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சில் ரேணுகா சிங், கிரந்தி கவுடு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் கடைசி அணியாக அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா கூறும்போது, “நாங்கள் முன்னேறியுள்ளது எனக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. கடந்த 3 ஆட்டங்கள் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தன. இந்த 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்.
ஆனால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளது எங்களுக்கு மனநிம்மதியைத் தந்துள்ளது. பிரதிகா ராவல் அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். களத்தில் என்னுடைய இயற்கையான விளையாட்டை விளையாட அவர் அனுமதித்தார்” என்றார்.