

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 333 ரன்கள் எடுத்தது.
அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 35 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்வான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. சீனியர் பேட்ஸ்மேன்களான பாபர் அஸம், முமகது ரிஸ்வான் ஆகியோர் போராடி ரன்கள் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாபர் அஸம் 87 பந்தகளில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ரிஸ்வான் 18 ரன்களில் நடையை கட்டினார்.
நோமன் அலி 0, ஷாகீன் ஷா அப்ரிடி 0, சல்மான் ஆகா 28, சஜித் கான் 13 ரன்களில் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 6 விக்கெட்களை வீழ்த்தினார். கேசவ் மகாராஜ் 2 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 68 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரியான் ரிக்கெல்டன் 25, கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்கள் சேர்த்தனர்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. லாகூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றிருந்தது.