ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா

ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா
Updated on
1 min read

துபாய்: செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக்
சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, 7 ஆட்டங்களில் 314 ரன்கள் குவித்திருந்தார். இந்த தொடரில் அவரது சராசரி 44.85 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 200 ஆகவும் இருந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 25 வயதான அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் ஐசிசி டி 20 பேட்டிங் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளையும் எடுத்து அசத்தியிருந்தார். ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் இடம்பெற்ற நிலையில், அபிஷேக் சர்மா விருதை தட்டிச் சென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 3 போட்டிகளில் அவர், 2 சதங்கள், ஒரு அரை சதம் விளாசி அசத்தினார். ஒட்டுமொத்தமாக அவர், கடந்த மாதத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் 308 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது சராசரி 77 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 135.68 ஆகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in