Published : 14 Oct 2025 08:25 PM
Last Updated : 14 Oct 2025 08:25 PM

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’... 1983-ல் ஸ்ரீநகர் மைதானத்தில் ஒலித்த முழக்கம் - பூவா தலையா | அத்தியாயம் 1

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எப்போதும் கிரிக்கெட் விளையாட்டுக்கு பலத்த வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு மக்களின் உணர்வுகளுடன் இரண்டற கலந்தது கிரிக்கெட். அதனால்தான் இரு நாட்டு ரசிகர்களுக்கும் தங்கள் அணி வென்றால் அது கொண்டாட்டம். பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான், பின்னாளில் அந்த நாட்டின் பிரதமர் ஆனார். இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பிரவேசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இப்படி கிரிக்கெட்டுக்கு எப்போதும் இந்தியா, பாகிஸ்தானில் அதீத, அமோக, அட்டகாச ஆதரவு இருப்பதுண்டு.

சமயங்களில் கிரிக்கெட் களத்தில் சில முழக்கங்களை ரசிகர்கள் முன்வைப்பதும் உண்டு. உலக அளவில் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டுகளில் ஒன்று என்பதால் கூட இந்த வகை முன்னெடுப்புகள் இருக்கலாம். 2023 உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத் நகரில் ‘இந்தியா - பாகிஸ்தான்’ இடையிலான லீக் ஆட்டத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பார்வையாளர்கள், பாகிஸ்தான் வீரர்களை நோக்கி முழக்கமிட்டதாக தகவல் உண்டு. அது போலவே ஐபிஎல் 2018-ம் ஆண்டு சீசனில் ‘காவிரி நீர்’ விவகாரத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் டூப்ளஸி, மீது காலணி வீசிய சம்பவங்களும் நடந்தது உண்டு.

அப்படி ஒரு சம்பவம் கடந்த 1983-ல் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தின் போதும் அரங்கேறியது. அந்த ஆட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. காஷ்மீரில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியாக அது அமைந்தது. அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தி அதன் ஊடாக அறிக்கை ஒன்றையும் பிரகடனம் செய்தனர்.

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ - கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று காட்டிய காலம் அது. அதன் காரணமாக உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. அந்த சூழலில் தான் 1983-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி இந்த ஆட்டம் காஷ்மீரில் நடைபெற்றது. ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழை குறுக்கீடு காரணமாக இந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் உணவு நேர இடைவேளையின் போது பார்வையாளர்கள் சிலர் மைதானத்துக்குள் நுழைந்து, ஆடுகளத்தை சேதப்படுத்தினர். அதை செய்தவர்கள் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர். மேலும், இந்திய அணியின் வீரர்களை நோக்கி கற்கள் மற்றும் பாட்டீல்கள் வீச்சிலும் அவர்கள் ஈடுபட்டனர். இந்த செயலை செய்தவர்களில் சிலர் பின்னாளில் தீவிரவாதிகளாக மாறியதாகவும் தகவல்.

இந்திய அணி பீல்டிங் செய்த போதும் பார்கையாளர்கள் மாடத்தில் இருந்தவர்கள் இந்திய வீரர்களை வெறுப்பூட்டும் வகையில் Boo செய்துள்ளனர். சிலர் இம்ரான் கானின் படங்களை கையில் வைத்திருந்ததாகவும் தகவல்.

அந்த சம்பவம் நடக்காமல் போயிருந்தால் உலக கிரிக்கெட்டில் ஷெர்-இ-காஷ்மீர் மைதானம் முக்கியமான மைதானமாக மாறி இருக்கும். ஏனெனில், அந்த மைதானத்தின் அமைப்பு அப்படி. இயற்கை தாயின் மடியில் தவழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சினார் மரங்கள் சூழ இந்த மைதானம் அமைந்துள்ளது. சுமார் 12,000 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து இந்த மைதானத்தில் போட்டியை காணலாம். இந்த மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தனது சுயசரிதையில் எழுதி உள்ளார்.

‘அந்த போட்டியில் நான் கண்ட காட்சிகள் என் நினைவுகளில் உள்ளன. நாங்கள் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தால் ரசிகர்களின் ஏமாற்றத்தினால் அப்படி செய்தார்கள் என எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே எங்களை நோக்கி கூச்சலிட ஆரம்பித்தனர். அதை எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் களத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடன் விளையாடினோம். பாகிஸ்தான் உடன் அல்ல. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் அங்கு ஒலித்தன’ என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் 1986-ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டிக்கு பின்னர் இந்த மைதானத்தில் ஒரு போட்டி கூட நடைபெறவில்லை. இதற்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

பாதுகாப்பு படையினரின் முகாமாக சில ஆண்டுகள் இந்த மைதானம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அரசு, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன. முதல் தர கிரிக்கெட் போட்டிகள் மற்றும் காஷ்மீர் ப்ரீமியர் லீக் போட்டிகள் இந்த மைதானத்தில் அண்மைய காலத்தில் நடைபெற்றுள்ளன. பிசிசிஐ-யின் தலைவராக உள்ள மிதுன் மன்ஹாஸ், ஜம்மு காஷ்மீர் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். அவர் அந்த பகுதியில் பிறந்தவர். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள பல்வேறு எதார்த்த தடைகளை கடந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கம்பேக் கொடுப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

| இன்னிங்ஸ் தொடரும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x