

இங்கிலாந்து அணியின் ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பு திமிர்த்தனத்தைக் காட்டுகிறது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார்.
நவம்பர் கடைசியில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு முன்பாக நியூஸிலாந்தில் இங்கிலாந்து 6 வெள்ளைப்பந்து குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஆடுகிறது. சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு வெள்ளைப்பந்து தொடர் மூலம் தயாரிப்பா என்று கேட்கிறார் இயன் போத்தம். இந்த போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் வார்ம் அப் போட்டியில் ஆடுகின்றனர்.
ஆஸ்திரேலிய ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிகளுடன் ரெட் பால் பயிற்சி ஆட்டம் அல்லது முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஏதோ அணியைக் கொடுத்து விளையாடச் சொல்கின்றனர். பயணம் போகும் அணிகளும் ஷெட்யூலில் ஷெஃபீல்ட் ஷீல்ட் அணியுடன் போட்டியை வைக்குமாறு வலியுறுத்துவதில்லை.
போத்தம் ஆடிய காலக்கட்டங்களில் 1978-79 ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரிலும், அதன் பின்னர் நடைபெற்ற 1986/87 ஆஷஸ் தொடரிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்களிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போத்தம் கூறும்போது, “டெஸ்ட் தொடருக்கு முன்பாக ‘ஏ’ அணியுடன் ஆடுகிறோம். ஒரு மாகாண அணியுடன் கூட ஒரு போட்டியும் இல்லை. இது உண்மையில் திமிர்த்தனமே. அங்கு நமக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள சிகப்புப் பந்தில்தான் ஆட வேண்டும்.
நாங்கள் அதிகம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறோம் என்கிறார்கள். ஆனால், போதுமான அளவுக்கு ஆடுவதில்லை என்பதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவில் விளையாடும் சூழலே வேறு. வெப்பம், பந்துகளின் பவுன்ஸ், ரசிகர் பட்டாளம், ஆஸ்திரேலிய வீரர்களின் வாய்ப்பேச்சு என்று இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24.5 மில்லியன் மக்களை எதிர்கொள்வதாகும்.
பவுலர்களும் சரியாகத் தயாராக முடியவில்லை, பவுலர்கள் உடற்பயிற்சி சாலைகளில் உடல் தகுதியைப் பெற முடியாது. இது ஏறக்குறைய நிரூபிக்கப் பட்ட ஒன்று.
மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், இவர்கள் காயத்தில் இருக்கின்றனர். இவர்கள் போதுமான அளவுக்கு ஆடுவதில்லை. அதனால்தான் காயமடைகின்றனர். விளையாடுவதன் மூலமே உடல்தகுதியுடன் இருக்க முடியும்.
முதல் ஓவரிலேயே மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் அல்லது பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்ய முடியாமல் போனால் முடிந்தது கதை. இதுதான் பெரிய கவலை” என்று கூறுகிறார் போத்தம்.