

டி20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டம் டையில் முடிவடைந்ததால் வெற்றியை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது.
இதில் இரண்டு அணியும் தலா ஒரு ஓவர் பேட்டிங், பந்து வீச்சில் ஈடுபடும். பேட்டிங்கில் ஓர் அணியில் 3 பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் 2 விக்கெட்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில் கன்கஷன் மாற்று வீரராக களமிறங்கிய வீரர் கூட பேட்டிங் செய்யலாம்.
சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்யும் அணி 2 விக்கெட்களை இழந்துவிட்டால் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிடும். இந்த இரு அணிகளுக்கும் தலா ஒரு டிஆர்எஸ் வழங்கப்படும். இதை அவர்கள் பயன்படுத்தும் போது அந்த முடிவு மாறாவிட்டால் அதை அவர்கள் மீண்டும் பயன்படுத்த முடியாது. இரு இன்னிங்ஸிலும் எந்த அணி அதிக ரன்கள் சேர்க்கிறதோ அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
சூப்பர் ஓவரிலும் ஆட்டம் டையில் முடிவடைந்தால் போட்டியில் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும். இந்த வகையில் சூப்பர் ஓவர்களை நடத்துவதற்காக மட்டும் ஒருமணி நேரம் ஒதுக்கப்படும். இதற்குள் சூப்பர் ஓவரை நடத்தி முடிக்க முடியாவிட்டால் கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும். இதிலும் சூப்பர் ஓவரை நடத்தி தீர்மானிக்க முடியவில்லை என்றால் இறுதியில் ஆட்டம் டை ஆனதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
வானிலை காரணமாக சூப்பர் ஓவரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் இதே விதிமுறைதான் பின்பற்றப்படும். ஒருவேளை நாக் அவுட் சுற்றுகளில் சூப்பர் ஓவரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்றுள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை இரு அணிகளும் சமஅளவிலான புள்ளிகளை பெற்றிருந்தால் அப்போது நிகர ரன் ரேட் கருத்தில் கொள்ளப்படும். அப்போது மற்ற போட்டிகளில் அபராதம், எச்சரிக்கை, இடை நீக்க நேரம் என ஏதேனும் இருந்தாலும் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பிரதான ஆட்டத்தில் எந்த அணி 2-வது பேட் செய்ததோ அந்த அணியே சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்யும். ஒருவேளை 2-வது முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டால் அப்போது பிரதான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அணி முதலில் பேட் செய்ய களமிறங்கும். மேலும் சூப்பர் ஓவரில் பந்து வீச்சுக்கு பயன்படுத்தப்படும் பந்தை அந்தந்த அணிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
முதல் சூப்பர் ஓவரில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன் 2-வது சூப்பர் ஓவரில் பேட் செய்ய முடியாது. ஆனால் 3-வது ஓவரில் பேட் செய்யலாம். அதேவேளையில் ஒரு சூப்பர் ஓவரில் பந்து வீசிய பந்து வீச்சாளர் 2-வது சூப்பர் ஓவரில் பந்து வீச முடியாது.