

லாகூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக்கும், இமாம் உல் ஹக்கும் களமிங்கினர். அப்துல் ஷபிக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்குடன், கேப்டன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். இருவரும் அரை சதம் விளாசிய நிலையில் கேப்டன் ஷான் மசூத் ஆட்டமிழந்தார். 147 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 76 ரன்கள் குவித்த நிலையில் அவர், சுப்ராயன் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் வந்த பாபர் அசம் 23, சவுத் ஷகீல் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். சதத்தை நோக்கி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இமாம் உல் ஹக் 93 ரன்களில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வானும், சல்மான் ஆகாவும் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தனர்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை எடுத்துள்ளது. முகமது ரிஸ்வான் 62 ரன்களும், சல்மான் அலி ஆகா 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் செனுரன் முத்துசாமி 2 விக்கெட்களும், காகிசோ ரபாடா, சுப்ராயன், சைமன் ஹார்மர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.