

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் இரட்டை சதம் எட்டும் வாய்ப்பை அவர் இழந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தை 318 ரன்னில் நிறைவு செய்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா இன்று தொடங்கியது. இதில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய வேகத்தை விக்கெட்டை பறிகொடுத்தார் ஜெய்ஸ்வால்.
ஜேடன் சீல்ஸ் வீசிய ஓவரில் பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்தார். உடனடியாக சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால், எதிர்திசையில் இருந்த கேப்டன் ஷுப்மன கில் ஓட்டம் எடுக்காமல் இருந்தார். அதற்குள் பாதி தூரம் ஓடி வந்த ஜெய்ஸ்வால், மீண்டும் விக்கெட்டை காத்துக் கொள்ளும் வகையில் வந்த திசையை நோக்கி ஓடினார். அதற்குள் ஸ்டம்புகளை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் தகர்த்தனர். கள நடுவர் அவுட் கொடுத்தார்.
‘நான் தானே அழைத்தேன்’ என ஷுப்மன் கில் வசம் தெரிவித்தார். பின்னர் நடுவர்கள் ‘அவுட்’ என அவரிடம் தெரிவிக்க பெவிலியன் திரும்பினார். இதனால் 200 ரன்களை எட்டும் வாய்ப்பை அவர் இழந்தார். அதே நேரத்தில் இந்த போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசினார். தற்போது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஜூரெல் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கில், 128 ரன்கள் எடுத்திருந்தார்.