Published : 20 Aug 2014 08:45 PM
Last Updated : 20 Aug 2014 08:45 PM

கபில் தேவ் ஒரு சந்தர்ப்பவாதி: ஹாக்கி இந்தியா தலைமைச் செயலர் கடும் காட்டம்

அர்ஜுனா விருதுக்காக பரிந்துரை செய்த 7 ஹாக்கி வீரர்கள் பெயரை நிராகரித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார் ஹாக்கி இந்தியா தலைமைச் செயலர் நரீந்தர் பாத்ரா.

அர்ஜுனா விருதுகள் தேர்வுக்குழுத்தலைமைப் பொறுப்பு வகித்த இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 7 ஹாக்கி வீரர்கள் பெயரை நிராகரித்ததாக ஹாக்கி இந்தியா தலைமைச் செயலர் நரீந்தர் பாத்ரா, அவரை சந்தர்ப்பவாதி என்று கடுமையாக சாடியுள்ளார்.

அர்ஜுனா விருதுகள் குழுவினர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 15 வீரர்கள் பட்டியலை ஆய்வு செய்து கூடுதல் வீரர்களைச் சேர்க்க வேண்டியத் தேவையில்லை என்று முடிவெடுத்ததையடுத்து பாத்ரா ஆவேசமாக கபில் மீது தனது வசையைப் பொழிந்துள்ளார்.

பாத்ரா மேலும் காட்டமாகத் தெரிவிக்கையில், “கபில் தேவ் ஒரு மரியாதைக்குரிய வீரர், ஆனால் அவருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோய் உள்ளது. என் மீதுள்ள பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளவே அவர் அந்த 7 வீரர்களை நிராகரித்துள்ளார். மேலும் அனுபம் குலாட்டி என்ற மோசடி ஹாக்கி நிபுணரின் மதிப்பீட்டின் படி இந்த வீரர்கள் திறமையற்றவர்கள், அர்ஜுனா விருதுக்குத் தகுதியற்றவர்கள் என்று முடிவெடுத்துள்ளார்.

இந்த வீரர்கள் பல கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியாவுக்கு விளையாடினர். இத்தகைய வீரர்களை சில்லறைத் தனமான எண்ணங்களுடனும், பட்சபாதமான அணுகுமுறையுடன் நிராகரித்திருப்பது வெட்கக் கேடு” என்று கூறினார்.

தனக்கும் கபில் தேவுக்கும் இருந்து வந்த முன்பகை பற்றி அவர் கூறியதாவது:

ஹரியானா, புவனேஷ்வர் மைதானங்களில் ஒளிவெள்ள விளக்குகள் அமைப்பதில் கபில் தேவின் நிறுவனமான தேவ் மஸ்கோ நிறுவனத்திற்கு சகாயம் செய்ய அவர் எதிர்பார்த்தார். ஆனால் நான் நிராகரித்து விட்டேன்.

மேலும் கபில்தேவ் என்னை ‘யார் இந்த பாத்ரா?’ என்று கேட்டுள்ளார். பெரோஷ் ஷா கோட்லா மைதானம் மறுகட்டுமானம் கண்ட போது, உயர்கோபுர ஒளிவெள்ள விளக்குகள் அமைக்க ஜி.இ. பிலிப்ஸ், பஜாஜ் மற்றும் கபிலின் தேவ் மஸ்கோ ஆகியோர் டெண்டர் அனுப்பியிருந்தனர். அதில் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த கபில் தேவ் நிறுவனத்திற்கே ஒப்பந்தம் அளித்தேன்.இதுவும் கபிலுக்கு நன்றாகவே தெரியும். மேலும் எனக்கும் கபிலுக்கும் பொது நண்பரான ஒருவரிடம் எனக்கு நிறைய மெசேஜ்களையும் கபில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் ஹாக்கி இந்தியா லீக் தொடங்கிய போது (2013) தொலைகாட்சி ஒளிபரப்பின் தரத்தை உயர்த்த உயர்ரக விளக்குகள் தேவைப்பட்ட போது ஹாக்கி இந்தியா கபிலின் நிறுவனத்தை அணுகிய போது, மற்றவர்களை விட கபில் நிறுவனம் 10 மடங்கு அதிக விலையைக் குறிப்பிட்டிருந்ததையும் அவர் அறிவார். அப்போதெல்லாம் கபிலுக்கு நான் யார் என்று தெரிந்தது, இன்று யார் பாத்ரா என்கிறார்.

பிசிசிஐ-க்கு எதிராக ஒரு கிரிக்கெட் லீகைத் தொடங்கி அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தார். பணம் சம்பாதிப்பது அவரது உரிமை. 1983 உலகக் கோப்பை வெற்றி வீரர்களுக்கு பிசிசிஐ அருமையான தொகைகளை அளித்தது, பென்ஷன் திட்டம் கொண்டு வந்தது. பிசிசிஐ-யை விமர்சனம் செய்த ஒரு வீரர் அந்தச் சலுகைகளை அடைந்திருக்கக் கூடாது.

மீண்டும் பிசிசிஐ-யில் சேர்த்துக் கொள்ள கபில் எங்கு சென்று அழுதார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவேதான் கபில் ஒரு சந்தர்ப்பவாதி என்கிறோம்.

இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x