Published : 20 Aug 2014 10:00 AM
Last Updated : 20 Aug 2014 10:00 AM

டெஸ்ட் தரவரிசை இந்தியாவுக்கு பின்னடைவு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி ஓர் இடத்தை இழந்து 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணி சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததோடு, ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்த மிக மோசமான தோல்வியாகும். அதன் எதிரொலியாக 6 ரேட்டிங் புள்ளிகளை இழந்த இந்திய அணி தரவரிசையில் ஓர் இடத்தையும் இழந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அபார வெற்றி கண்ட இங்கிலாந்து 4 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான் 3-வது இடத்தில் இருந்து 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 96 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெசிமல் புள்ளி அடிப்படையில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் உள்ளன.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் புஜாராதான். இங்கிலாந்து தொடரில் சொதப்பிய அவர் 4 இடங்களை இழந்து இப்போது 16-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 518 ரன்கள் குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். அவர் தற்போது 9-வது இடத்தில் உள்ளார்.

இந்திய பவுலர்களில் அஸ்வின் (13-வது இடம்), பிரக்யான் ஓஜா (15-வது இடம்), இஷாந்த் (20-வது இடம்) ஆகியோர் மட்டுமே முதல் இருபது இடங்களுக்குள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x