குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK

குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
Updated on
1 min read

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. இந்தியா தரப்பில் குல்தீப் மற்றும் அக்சர் படேல் அபாரமாக பந்து வீசினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஆடுகளம் ஸ்லோவாக இருக்கின்ற காரணத்தால் முதலில் பேட் செய்து ரன் குவிக்க விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்தார்.

அந்த அணிக்காக சஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப் ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் சயீம் அயூப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் 3 ரன்களில் முகமது ஹாரிஸ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர். பகர் ஸமான், கேப்டன் சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், சஹிப்சதா பர்ஹான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணிக்கு ஆறுதலாக அமைந்தது சஹிப்சதா பர்ஹானின் ஆட்டம்தான். அவர் 44 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3, அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுகளை குல்தீப், அக்சர் ஆகியோர் வீழ்த்தி இருந்தனர்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இறுதி ஓவர்களில் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடி காட்டினார். அதன் மூலம் அவர் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 128 ரன்கள் தேவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in