Published : 28 Jul 2018 09:11 AM
Last Updated : 28 Jul 2018 09:11 AM

புவனேஸ்வர், பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு: கிளென் மெக்கிராத் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஸ்வர், ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பின்னடைவுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் கிளென் மெக்கிராத் கூறினார்.

சென்னையிலுள்ள எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனில் உள்ள வீரர்களுக்கு பயிற்சியளிக்க வந்துள்ளார் கிளென் மெக்கிராத். பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியா ளராக செயல்பட்டு வரும் மெக்கிராத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. என்னைக் கேட்டால் இங்கிலாந்தில் இந்திய அணி தனது திறமையை தொடக்கத்திலேயே சிறப்பாக வெளிக்காட்டியது என்று சொல்வேன். டி20 தொடரை வென்ற இந்தியா, ஒரு நாள் போட்டியில் தோல்வி கண்டது. இருப்பினும் இந்தியாவுக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். குறிப் பாக இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

தற்போதுள்ள இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாயகரமான பந்துவீச்சாளராக இருக்கிறார். இங்கிலாந்து ஆடு களங்களில் அவர் அருமையாக பந்து வீசக் கூடியவர். அவரை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இருக்கும்.

ஆண்டர்சன் பந்துவீச்சை சமாளித்துவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை. இங்கிலாந்து ஆடுகளங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை அருமையாக ஸ்விங் செய்வார். அந்தஸ்விங் வகை பந்துவீச்சை சமாளிப்பது இந்திய அணியினருக்கு பிரச்சினையாக இருக்கும்.

அதே நேரத்தில், இந்திய அணி பேட்டிங்கில் வலுவான வரிசையைக் கொண்டுள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் இதுவரை பிரகாசித்து வந்துள்ளனர். எனவே இந்திய அணி அங்கு நிச்சயம் பிரகாசிக்கும்.

ஆனால் இந்திய வீர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு, நெருக்கடியைத் தரும். அவர்தான் அந்த அணியின் முக்கியமான துருப்புச்சீட்டாக உள்ளார்.

ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதே நேரத்தில் தற்போது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் முக்கியப் பந்துவீச்சாளர்கள் புவ னேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். எனவே இந்திய அணியின் பவுலிங் வரிசை எப்படி இருக்கப் போகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம்.

அனைத்து அணிகளிலுமே பந்துவீச்சாளர்கள் காயமடைவது சாதாரணமான விஷயம்தான். முக்கிய பந்துவீச்சாளர்கள் காயமடைந்துள்ளதால் அந்த சுமை, அதற்கு அடுத்த இடங்களில் உள்ள பந்துவீச்சாளர்கள் மீது விழும். ஆனால் பேட்டிங் வரிசை பலமாக இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம்.

அதேபோல இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகின்றனர். இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி...சுழல் பந்துவீச்சாளர்களின் பங்கு மகத்தானது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன்வார்னே, இங்கிலாந்தில் அற்புதமாக பந்துவீசுவார். அங்கு பந்துகள் மெதுவாக சுழலும். அதை எப்படி இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் கையாளப் போகிறார்கள் என் பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசும்போது இந்திய அணிக்கு வெற்றி எளிதாகும்.

இந்திய அணியில் புவனேஸ்வர், பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவுதான். அவர்கள் இருவரும் அணியில் இருந்தால் அணிக்கு பெரும் பலம் என்பது நிச்சயம். 2 சுழல் பந்துவீச்சாளர்கள், 3 வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற நிலையில் களமிறங்கும்போது அது அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் புவனேஸ்வர், பும்ரா இல்லாதது அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இஷாந்த் சர்மா தனது அனுபவத்தை இந்தத் தொடரில் நன்கு பயன்படுத்த வேண்டும். அவருக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து பந்து வீச வரும் சுழல் பந்துவீச்சாளர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும்போது, இந்தியாவுக்கு வெற்றி வசமாகும்.

கேப்டன் என்று எடுத்துக் கொள்ளும்போது விராட் கோலி, திறமையாக செயல்படுகிறார். இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் விராட் கோலி. அவர் ஒரு தரமான கிரிக்கெட் வீரர். இதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அனைத்து வகை யான ஷாட்களையும் விளையாடக் கூடிய வீரர் அவர். களத்தில் அவரது ஆக்ரோஷத்தைப் பார்க்கும் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். எனவே இந்தத் தொடரிலும் அவரிடமிருந்து அதிக ரன்களை எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு இந்திய வீரர்கள் விளையாடும் போது அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x