Published : 14 Jul 2018 07:45 AM
Last Updated : 14 Jul 2018 07:45 AM

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்று 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மோதுகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் 52 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அந்த அணியின் கனவு தகர்ந்தது. 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கால் பதிக்கும் கனவுடன் அரை இறுதி ஆட்டத்தை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 5-வது நிமிடத்திலேயே கெய்ரன் டிரிப்பியர் அடித்த அபாரமான கோலால் முன்னிலை பெற்றது. ஆனால் அதை அந்த அணியால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.

அதேவேளையில் பெல்ஜியம் அணி தனது அரை இறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்தது. உலகத் தரம் வாய்ந்த வீரர்களை அணியில் கொண்டிருந்தாலும், ஓட்டுமொத்த பிரான்ஸ் அணியின் தடுப்பு அரணால் பெல்ஜியம் அணி அரை இறுதியில் முடக்கப்பட்டிருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கெனவே லீக் சுற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றிருந்தது.

இதற்கு பதிலடி கொடுத்து தொடரை கவுரவமான வகையில் 3-வது இடத்துடன் நிறைவு செய்வதில் இங்கிலாந்து அணி முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் 1986-ம் ஆண்டு 4-வது இடம் பிடித்த பெல்ஜியம் அணியும் சிறப்பான வகையில் தொடரை நிறைவு செய்வதில் ஆர்வமுடன் உள்ளது. மேலும் இன்றைய ஆட்டம் ‘தங்க காலணி விருது’ யாருக்கு என்பதை முடிவு செய்யும் விதமாகவும் அமையக்கூடும். இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன், இந்தத் தொடரில் இதுவரை 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளை யில் பெல்ஜியத்தின் ரோமுலு லுகாகு 4 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் ஹாரி கேன் மேலும் இரு கோல்கள் அடிக்கும் பட்சத்தில் 2002-ம் ஆண்டு 8 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையை சமன் செய்யக்கூடும். இங்கிலாந்து வீரர்களில் இதற்கு முன்னர் கடந்த 1986-ம் ஆண்டு கேரி லினேகர் (6 கோல்கள்) தங்க காலணி விருது வென்றிருந்தார். தற்போது ஹாரி கேன் இந்த விருதை வென்றால் 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x