‘குட் லக் Champ’ - ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடமில்லை: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

‘குட் லக் Champ’ - ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடமில்லை: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்
Updated on
1 min read

சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை தேர்வு செய்யாதது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘இதில் அவரது தவறு எதுவும் இல்லை. இப்போதைக்கு வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டி உள்ளது’ என ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்யாதது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் பார்மெட்டில் கடந்த இரண்டு சீசன்களாக அவரது ஆட்டம் அபாரமாக உள்ளது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய அவர், 600+ ரன்களை 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். மிடில் ஆர்டரில் இறங்கி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடும் திறன் படைத்தவர். கடந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

துபாயில் பிப்ரவரி (இறுதி) மற்றும் மார்ச் (தொடக்கம்) மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தரப்பில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக ஸ்ரேயஸ் ஜொலித்தார். அதனால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரை பிசிசிஐ நிர்வாகம் தேர்வு செய்யாதது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்: ‘டி20 அணியில் இடம்பெற இதைவிட ஒரு வீரர் வேறென்ன செய்ய முடியும்? ஸ்ரேயஸ் ஐயராக இருப்பது சுலபமல்ல. துணை கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டிய வீரர்’, ‘அணியில் இடம்பெற தகுதியானவர்’, ‘ஆடும் லெவனில் ஆட வேண்டியவர். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது’, ‘இது ஹார்ட் பிரேக்’, ‘அபார திறன் படைத்தவர் தேர்வாகாதது துரதிர்ஷ்டவசம்’, ‘ஒரு முறை வெளியேறிவிட்டால் மீண்டும் டி20 அணியில் இடம்பெறுவது மிகவும் சவால்’, ‘குட் லக் Champ’ என ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் இடமில்லாதது குறித்து நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in