

ஹம்பண்டோட்டாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை 45 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது, இன்னிங்ஸின் இடையில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து டக்வொர்த் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் அணியும் இதே 45 ஓவர்களில் 275 எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 44.5 ஓவர்களில் ஒருபந்து மீதமிருக்கும் போது பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை ரங்கனா ஹெராத்திடம் இழந்த போது 23 ஓவர்களில் 108/5 என்று சரியும் நிலையில் இருந்தது.
22 ஓவர்களில் தேவை 167 ரன்கள். அப்போதுதான் ஃபவாத் ஆலம், சோஹைப் மக்சூத் இணைந்து அரிய வெற்றியைச் சாதித்தனர். 35 ஓவர்களில் 185/5 என்ற நிலையிலும் கூட 10 ஓவர்களில் 91 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையே இருந்தது. ஆனால் பவர் பிளேயில் 46 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் விக்கெட்டுகளை இழக்கவில்லை. அடுத்த 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலையிலும் பாகிஸ்தான் தோற்கவே வாய்ப்பு அதிகம் இருந்தது, காரணம் ஒரு விக்கெட் அவுட் ஆனால் கூட இலங்கை பாகிஸ்தானை கட்டுப்படுத்தியிருக்கும், ஆனால் லஷித் மலிங்காவின் யார்க்கர்கள் சரியாக விழாத காரணத்தினால் அவரது பந்துகள் பவுண்டரிக்கு விரட்டப்பட்டன. குறிப்பாக மக்சூத், மலிங்காவை சிறப்பாக ஆடினார்.
மக்சூத், பவாத் ஆலம் ஜோடி 147 ரன்களை விரைவில் சேர்த்தனர். மக்சூத் 73 பந்துகளில் 89 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். ஃபவாத் ஆலம் 62 ரன்களுக்கு மலிங்காவிடம் ஆட்டமிழந்த போது கூட கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவையாக இருந்தது. இன்றைய கிரிக்கெட்டில் இதுபோன்ற துரத்தல்கள் சகஜம் என்றாலும் மலிங்கா இருக்கும் போது கடினமே.
கடைசி ஓவரின் 5வது பந்தில் வெற்றியை சாதித்த போது மக்சூத் 89 ரன்களையும் ஷாகித் அப்ரீடி 14 ரன்களையும் எடுத்திருந்தனர்.
துவக்க வீரர் அகமது ஷேஜாத் 49 ரன்களை எடுத்த பிறகு பாகிஸ்தானின் மற்ற பேட்ஸ்மென்கள் சோபிக்கவில்லை.
முன்னதாக பாகிஸ்தானால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை அணியினர் 7 அடி உயர பாக்.பவுலர் மொகமது இர்ஃபானின் எகிறும் பந்துகளுக்கு திக்கித் திணறினர். மீண்டும் மகேலா ஜெயவர்தனேயும் கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸும் இலங்கை மீட்சிக்குக் கை கொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 85 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். ஜெயவர்தனே 66 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 73வது அரைசதம் எடுத்தார்.
அனைவரையும் விட கடைசியில் இறங்கிய பிரியரஞ்சன் என்ற வீரர் 15 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 39 ரன்களை விளாசியதால் இலங்கை 45 ஓவர்களில் 275 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் மொகமது இர்பான் 2 விக்கெட்டுகளையும் வகாப் ரியாச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஜுனைத் கான் 9 ஓவர்களில் 75 ரன்கள் விளாசப்பட்டார். அப்ரீடி 9 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
ஆட்ட நாயகனாக மக்சூத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது.