

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே.
"அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளவில்லை. பந்துகளை த்ரோ செய்யச்சொல்லி ஆடிவந்தார். மற்றபடி முழு வலைப்பயிற்சியில் அவர் தொடர் முழுதும் ஈடுபடவில்லை.
அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று நாங்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தோம். நான் அவரிடம் இது பற்றி கேட்டபோது, நான் எனது பேட்டிங் பற்றி இப்போது சிறப்பாக உணர்கிறேன், வலையில் வந்து விளையாடி ‘டச்’சை விரயம் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு நான் உணரும்போது களத்தில் சிறப்பாக பேட் செய்வேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பையே அவர் மாற்றிவிட்டார் அதாவது களத்திலும் சரி களத்திற்கு வெளியிலும் சரி அவர் கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பை மாற்றியவர். இது பெரிய புதிர்தான். ஒரு தலைமுறையே சச்சின் டெண்டுல்கருடன் வளர்ந்தது. அவரது உயர்வு, வீழ்ச்சிகளிடையே அவருடன் விளையாடியவர்கள் தங்களது கனவுகளையும் ஆசைகளையும் அவரது சாதனைகளுடன் வாழ்ந்தார்கள். நிறைய பேர் கிரிக்கெட்டிற்கு வந்ததற்கு சச்சின் டெண்டுல்கர்தான் காரணம்.
24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியவர்கள் தாங்கள் சச்சின் என்ற மிகப்பெரிய விரர் ஆடும் காலத்தில் ஆடியதை பெரும்பேறாகக் கருதுகின்றனர்.
நான் உடன் விளையாடியதிலேயே மிகச்சிறந்த மகா வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒரு பெரிய கிரியா ஊக்கி. 16 வயதில் களமிறங்கி அவர் செய்துள்ளது மிகப்பெரிய காரியம். அவரால் இதைச் செய்ய முடியும் போது நானும் ஏன் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆக முடியாது என்று என்னுள் ஆவலையும் ஊக்கத்தையும் தூண்டியவர் சச்சின் டெண்டுல்கர்” என்று இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ மாடர்ன் மாஸ்டர்ஸ் தொடரில் சச்சின் பற்றி இவ்வாறு கூறியுள்ளார் திராவிட்.
மேலும் சச்சின் ஒரு சுயநலவாதி என்ற விமர்சனம் இருந்து வருகிறதே என்ற பகுதியில் திராவிட் கூறுகையில், “இது நியாயமற்ற விமர்சனம், நாங்கள் அனைவரும் சதங்களை எடுக்கவே விரும்பினோம், ரன்கள் எடுப்பதால் அணிக்குத்தான் நன்மை. 100 சதங்களை ஒரு வீர்ர் எடுக்கிறார் என்றால் ஒவ்வொரு சதத்தையும் கூர்ந்து அவதானித்தால் உங்கள் வாதத்திற்கு போதுமானதாக சில இன்னிங்ஸ் அவ்வாறு இருக்கும். ஆனால் மற்ற இன்னிங்ஸ் இந்திய அணிக்கு மிக முக்கியமான கட்டத்தில் வந்த இன்னிங்ஸ்களாகும். மேலும் சதங்களைக் குவிக்கும் ஒருவரது ஆசையை நாம் இவ்வாறு குறைத்து மதிப்பிடக்கூடாது.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பல இன்னிங்ஸ்கள் ஆட்டத்தை மாற்றி அமைத்திருக்கின்றன, மேட்சை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கின்றன. எதிரணியினர் 300-350 ரன்கள் எடுத்தாலும் ஒருவர் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மற்ற வீரர்களைப் பொறுத்தது. அதில் பந்து வீச்சு மிக முக்கியமானது பந்து வீச்சு போட்டிகளை வெற்றிபெறச் செய்யும்.
சச்சின் டெண்டுல்கரின் கோல்டன் பீரியட் என்றால் அது 1998 முதல் 2002,2003 ஆம் ஆண்டுகளே. அதில் அவரது அபார இன்னிங்ஸ்கள் பலவற்றை வெற்றியாக மாற்றக்கூடிய பந்து வீச்சு நம்மிடையே இல்லை. கடைசியாக சென்சூரியனில் ஸ்டெய்ன், மார்கெலுக்கு எதிராக சச்சின் அடித்த சதம் அற்புதமான சதம், ஆனால் தென் ஆப்பிரிக்காவை 4வது இன்னிங்ஸில் சுருட்ட முடியவில்லை. எனவே வெற்றிபெறும் பந்து வீச்சு இருந்திருந்தால் அந்தச் சதங்கள் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆனால் அவர் தன் கிரிக்கெட் ஆட்டக் காலக்கட்டத்தில் ஒரு இடத்தில் இன்னும் சற்று நன்றாக செய்திருக்கலாம் என்று அவரே நினைக்கக்கூடிய விஷயம் என்னவெனில் 4வது இன்னிங்ஸில் பொதுவாக அவரது ஆட்டம் அவ்வளவாக சோபிக்காது போனதே.
சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய பலம் அவரது பொறுமை. அவரைச் சுற்றியுள்ள நெருக்கடிகளை அவர் கையாண்ட விதம் அபாரம். தோல்வியில் வெறுப்போ வெற்றியில் அதீதக் கொண்டாட்டமோ அவரிடம் இருந்ததில்லை இது அவரது மன வலிமைக்கு உதாரணம்.
பேட்டிங் உத்தியைப் பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கரிடம் உள்ள மிகப்பெரிய விஷயம் பந்தின் லெந்த்தை சரியாகக் கணிப்பது, எந்த விதமான பந்துகளையும் எதிர்கொள்ள அவர் கிரீஸில் சரியான நிலைக்குத் தயாராவது அற்புதமானது. அவர் தடுமாறி நான் பார்த்ததில்லை. பந்தைக் கணிப்பதில் அவருக்கு நிகர் அவரே”
இவ்வாறு கூறியுள்ளார் திராவிட்.
அந்த உலகக் கோப்பையின் 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வியடைந்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த திராவிட், சச்சின், கங்கூலி உள்ளிட்டோர் வீடுகள் தாக்கப்பட்டன. ரசிகர்கள் வீரர்களைக் கேலி செய்து ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டியதும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அந்த உலகக் கோப்பை போட்டிகளில் அடுத்து ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் வென்று இறுதிக்குள் நுழைந்து அதிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின், சேவாக் விளாசல் உலகப் பிரசித்தி பெற்றதும், ஷோயப் அக்தரை பாயிண்ட்டில் அப்பர் கட் செய்து சச்சின் சிக்சர் அடித்ததும் அந்த உலகக் கோப்பையில் நடந்ததே. அனைத்திற்கும் மேலாக வாசிம் அக்ரம் வீசிய முதல் ஓவரில் சச்சின் அடித்த இரண்டு பேக் ஃபுட் பன்ச்கள் இன்று வரை மறக்க முடியாததாகும். 270 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கைத் துரத்திய இந்தியா 12 ஓவர்களிலேயே 106 ரன்களை எட்டி பாகிஸ்தானிடமிருந்து போட்டியை பறித்தது. சச்சின் 98 ரன்கள் விளாசினார்,