Last Updated : 18 Jul, 2018 08:10 PM

 

Published : 18 Jul 2018 08:10 PM
Last Updated : 18 Jul 2018 08:10 PM

‘அன்று ஸ்டெம்ப்; இன்று பந்து’: ஓய்வு பெறப்போகிறாரா தோனி?

 நட்சத்திர பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலமும், செயல்பாடுகளும் எப்போதும் கவனிக்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்பதுதான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இங்கிலாந்து எதிரான ஒருநாள் போட்டித் தொடர் முடிந்தபோது, நடுவர் கையில் இருந்த பந்தை தோனி வாங்கிய வீடியோ வெளியானபோது அனைத்து ரசிகர்களின் இதயமும் படபடவென அடித்துக்கொண்டது.

ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிக்கும் போது, 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் தோனி இருந்தார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடாமல், ரன்களும் எதிர்பார்த்த அளவுக்கு எடுக்காத காரணத்தால், கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் விட்டு வெளியேறும் திடீரென தோனி ஸ்டெம்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

தோனியின் இந்த திடீர் செயல்பாடு சகவீரர்களுக்கு வியப்பை அளித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத சூழலில் ஊடகங்களை அழைத்து டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

அதேபோன்ற சூழல்தான் இந்தியக் கிரிக்கெட்டில் இப்போது நிலவுகிறது. ஏனென்றால், பினிஷிங் நாயகன் என்று அழைக்கப்படும் தோனி, கடைசியாகச் சதம் அடித்து ஒரு ஆண்டு ஆகிறது, அரைசதம் அடித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் எப்போதும் இல்லாத வகையில் அதிகமான பந்துகளைச் சந்தித்து குறைவான ரன்கள் எடுத்து ரசிகர்களின் விமர்சனத்துக்கும், நகைப்புக்கும் தோனி ஆளானார்.

தோனியின் ரசிகர்களே அவரை விமர்சிப்பதும், நகைப்பதும் புதிதாக இருந்தது. அதற்கான சூழலை அவராக உருவாக்கிக்கொண்டாரா, அல்லது உருவானதா எனத் தெரியவில்லை.

இதனால், தோனியின் வழக்கமான ஃபார்ம் போய்விட்டது, இனிமேல் அவரால் அதிரடியாக பேட் செய்ய முடியாது என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் நடுவர்கள் கையில் இருந்த பந்தை தோனி கேட்டுப்பெற்று தனது கையில் வைத்துக்கொண்டார்.

தோனியின் இந்தச் செயல் எப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கிறதே என சந்தேகித்த ரசிகர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்க ஆயத்தமாகிறாரா அல்லது அதற்கான சமிக்ஞைகளை ரசிகர்களுக்கு உணர்த்துகிறாரா என்பது புரியாமல் அது சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறியிருக்கிறது.

இது குறித்து இந்திய அணியின் நெருக்கமான வட்டாரங்களிடம் விசாரித்த போது, அப்படி ஒரு எண்ணம் தோனிக்கு வரவில்லை. அது அனைத்தும் கட்டுக்கதைகள், புரளிகள் எனக் கூறினர்.

உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவாக இருக்கும் சூழலில் தோனி ஓய்வு அறிவித்தால், இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியான சூழல் ஏற்படும். அதிலும் தோனியின் அனுபவமான பேட்டிங், கீப்பிங் போன்றவற்றை மற்ற வீரர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதும் கடினமாகும்.

அதேசமயம், தோனி குறித்த எந்தவிதமான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் கேப்டன் விராட் கோலி நிராகரித்து வருகிறார். சமீபத்தில் அவரின் பேட்டிங் திறமை குறித்து விமர்சிக்கப்பட்டபோது, தோனி போன்ற சிறந்த வீரர்கள் ஒரு சில போட்டிகளை வைத்து எளிதாக மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.

அதிலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு விஷயத்தை தோனி மிகவும் உணர்வுப்பூர்வமாகக் கையாளக்கூடியவர். கடந்த 2016-ம் ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் இந்திய அணி தோற்றது.

அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தோனி பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஒருவர், இந்த தோல்விக்குப்பின் நீங்கள் ஓய்வு அறிவிப்பீர்களா என்று கேட்டார்.

அந்த ஆஸ்திரேலியப் பத்திரிகையாளரை அனைவரும் முன் அழைத்து தனது அருகில் அமரவைத்த தோனி, அவரின் தோள்மீது கைபோட்டு பேசத் தொடங்கினார்.

''நான் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிவரை விளையாடுவேன்'' என நினைக்கிறீர்களா என்றார். அதற்கு அவர் 'ஆம்' என்றார்.

'' நான் உடற்தகுதியில்லாமல் இருக்கிறேனா?'' என்று தோனி கேட்டார். அதற்கு அந்தப் பத்திரிகையாளர் 'இல்லை' என்றார். பின் எதற்கு நான் ஓய்வு பெற வேண்டும் என்று தோனி கேட்கவே அனைவரும் சிரித்தனர்.

அதேபோன்ற வதந்திகள் தோனியைச் சுற்றி இன்று பறந்துள்ளன.

தோனி இதுவரை 321 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 46 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 51 ஆகும். இதில் 10 சதங்கள், 67 அரைசதங்களாகும்.

93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 1,487 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 2011-ம் ஆண்டு, 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போன்றவற்றை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையும் தோனிக்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x