சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?

சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
Updated on
2 min read

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அஸ்வின் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சிஎஸ்கே அணி நிர்வாகம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. முதல் சுற்றோடு வெளியேறியது. கேப்டன் ருதுராஜுக்கு மாற்றாக தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அணியால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.

கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரேவிஸ், நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் நம்பிக்கை அளித்திருந்தனர். இவர்களில் முதல் மூன்று பேர் சீசனின் பாதியில் அணியுடன் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழைய பாணியில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008 முதல் 2015 வரையில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் பிரதான வீரராக இடம்பெற்றவர். அதன் பின்னர் புனே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்காக அவர் ஐபிஎல் விளையாடி இருந்தார். இந்த நிலையில் கடந்த சீசனில் மீண்டும் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

மீண்டும் அவர் சிஎஸ்கே அணிக்கு திரும்பியது அப்போது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இருந்தும் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்றி இருந்தார். 186 பந்துகள் வீசி 283 ரன்களை கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அஸ்வின் மற்றும் சிஎஸ்கே தரப்பு கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அவரை வேறு சில அணிகள் தங்கள் அணிக்காக ஆட வைக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்.

அதேநேரத்தில் ‘சென்னை - சேப்பாக்கம்’ கிரிக்கெட் மைதான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் நூர் அகமது, ஜடேஜா மற்றும் அஸ்வின் என மூன்று ஸ்பின்னர்களை முழுவதுமாக தலா 4 ஓவர் வீச வைப்பது இயலாத ஒன்றாக அமைந்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங், ‘எங்களுக்கு உள்ளூர் மைதானத்தில் (ஹோம் கிரவுண்ட்) சாதகம் இல்லை’ என தனது கருத்தை கடந்த சீசனின் போது வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் அஸ்வின் வேறு ஐபிஎல் அணிக்கு டிரேட் செய்யப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in