ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்கிறது

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்கிறது
Updated on
1 min read

பதுமி: ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிருக்கான உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று (26-ம் தேதி) இந்திய கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வது உறுதியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூவுக்கு எதிராக போட்டியிடுபவர் தேர்வு செய்யப்படுவார்.

38 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி அரை இறுதி சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்து சீனாவின் டிங்ஜி லீயை தோற்கடித்து இருந்தார். அதேவேளையில் 19 வயதான நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் ஸோங்கி டானை வீழ்த்தியிருந்தார்.

கோனேரு ஹம்பி கூறும்போது, “செஸ் ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும், ஏனென்றால் இப்போது சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கு நிச்சயம் வரும். ஆனால் இறுதிப் போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும். திவ்யா தேஷ்முக் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.

இறுதிப் போட்டி 2 கிளாசிக் ஆட்டங்களை கொண்டது. இது 1-1 எனடிராவில் முடிவடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.43.24 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பெறுபவர் ரூ.30.26 லட்சம் பரிசை பெறுவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in