Published : 27 Jul 2018 08:54 AM
Last Updated : 27 Jul 2018 08:54 AM

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி; அயர்லாந்திடம் 1-0 என வீழ்ந்தது

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் தோல்வியைடந்தது.

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்துடன் மோதியது. இதில் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் அயர்லாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வீராங்கனை அனா கோல் அடிக்க அயர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த முன்னிலையை அயர்லாந்து அணி கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

மாறாக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியது. 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் இந்திய அணி வீராங்கனைகள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். மேலும் 29-வது நிமிடத்தில் ஓபன் பிளேவில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பையும் இந்திய அணி விரயம் செய்தது. தரவரிசையில் தன்னை விட பின்தங்கிய அயர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைவது இது 2-வது முறையாகும். கடைசியாக கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஹாக்கி உலக லீக் அரை இறுதியிலும் இந்திய அணி, அயர்லாந்திடம் வீழ்ந்திருந்தது.

முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அயர்லாந்து, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. தற்போது 2-வது வெற்றியை பதிவு செய் துள்ள அயர்லாந்து அணி பி பிரிவில் 6 புள்ளிகளுடன் கால் இறுதிக்குள் நேரடியாக நுழைவதற்கான வாய்ப் பை பலமாக தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 29-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x