Published : 06 Jul 2025 04:13 PM
Last Updated : 06 Jul 2025 04:13 PM
பர்மிங்காம்: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ரன்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.
இந்திய அணி இதில் வெற்றி பெற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வசம் உள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில், மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதன்படி தற்போது போட்டி நடைபெறும் பர்மிங்காம் - எட்ஜ்பாஸ்டன் மைதானம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
மழை காரணமாக ஆடுகளம் ‘கவர்’ செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை பராமரித்து வரும் பணியாளர்கள் பிட்ச்சில் மழைநீர் புகாத வண்ணம் திரைகளை கொண்டு கவர் செய்துள்ளனர். அங்கு நண்பகல் நேரம் வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகே ஆட்டம் தொடர வாய்ப்புள்ளதாக களத்தில் இருந்து வரும் நேரடி தகவல்கள் உறுதி செய்துள்ளன.
ஷுப்மன் கில் தாமதமாக டிக்ளேர் செய்தாரா? - இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்த பிறகே டிக்ளேர் செய்தது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கேப்டன் ஷுப்மன் கில் டிக்ளேர் செய்யும் முடிவை சற்று தாமதமாக எடுத்தாரா என்ற வாதம் சமூக வலைதளங்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது.
இங்கிலாந்து ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கு ஏதுவாக தட்டையாக இருப்பதே கேப்டன் கில் கொஞ்சம் தாமதமாக 600+ ரன்கள் முன்னிலை எடுத்த பிறகு டிக்ளேர் செய்ய காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமும் அங்குள்ள ஆடுகளங்கள் தான் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்தியா இந்த போட்டியில் வென்றால் ஆடுகள அமைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் கொஞ்சம் மாற்றி யோசிக்க வாய்ப்புள்ளது.
5-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதம் அடைந்தாலும் 90 ஓவர்கள் முழுவதுமாக வீசப்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தை கடக்கும் பட்சத்தில் தான் ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT