Published : 22 Jul 2018 02:50 PM
Last Updated : 22 Jul 2018 02:50 PM

ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமன் மிகக்குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்து ரிச்சார்ட்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி புலவாயோ நகரில் நடந்து வருகிறது.

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இடது கை பேட்ஸ்மேனுமான பக்கர் ஜமன், கடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையையும், சர்வதேச அளவில் 6-வது வீரரும் என்றசிறப்பையும் பெற்றார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டுவதற்குப் பக்கர் ஜமனுக்கு 19 ரன்களே தேவைப்பட்டது. இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 எட்டியபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவிரைவாக, குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை பக்கர் ஜமன் பெற்றார்.

தனது 18-வது இன்னிங்ஸில் பக்கர் ஜமன் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ரிச்சார்ட்ஸ் 21 போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.அதை பக்கர் ஜமன் முறியடித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்ஸன், ஜோனத்தன் டிராட், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் ஆகியோர் 21 போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.

இந்த ஆயிரம் ரன்களை எட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 24 இன்னிங்ஸ்களும், சச்சின் டெண்டுல்கருக்கு 34 போட்டிகளும் தேவைப்பட்டன.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பக்கர் ஜமன் இரட்டை சதத்தை தனது 17-வது இன்னிங்ஸில் அடித்து, இரட்டை சதம் அடித்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, மார்டின் கப்தில், கிறிஸ் கெயில் ஆகியோரின் வரிசையில் பக்கர் ஜமனும் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x