Last Updated : 15 Jul, 2018 01:06 PM

 

Published : 15 Jul 2018 01:06 PM
Last Updated : 15 Jul 2018 01:06 PM

தோனி மிகச்சிறந்த பினிஷர்; திறமையைச் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டம்: கோலி காட்டம்

 தோனி மிகச்சிறந்த பினிஷர், அவர் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் போனதற்காக அவரின் திறமையை மீண்டும், மீண்டும் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டமானது என்று தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

மிகச்சிறந்த பினிஷர் என்று கிரிக்கெட் உலகில் அடைமொழியுடன் அழைக்கப்படும் தோனி, நேற்றைய ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தோனியின் வழக்கமான பேட்டிங்கை காண வந்திருந்த இந்திய ரசிகர்கள், தோனியின் மந்தமான ஆட்டத்தால், பெரும் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அரங்கில் இருந்தவாறே தோனிக்கு எதிராக விமர்சனமும் செய்தனர்.

மிகச்சிறந்த பினிஷர் என்று அறியப்படும் தோனி, கடந்த 2 ஆண்டுகளாகவே மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் அழுத்தத்தைத் தாங்கி, அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வதில் தடுமாறி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கடைசி நேரத்தில் தோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் தோனி நெருக்கடியைத் தாங்குவதில்லை என்று புகார் எழுந்து வந்தது. இது நேற்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படையாகக் கூறினார்கள்.

போட்டி முடிந்த பின் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தோனி ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாவிட்டாலும் அவரின் பேட்டிங் திறமை, பினிஷிங் திறமை குறித்து மீண்டும், மீண்டும் கேள்வியாக எழுகிறது. ஒரு வீரரைக் குறித்து உடனுக்குடன் முடிவுக்கு வருவது துரதிர்ஷ்டம். அதிலும் தோனி போன்ற சிறந்த வீரரைக் குறித்து உடனடியாக முடிவெடுத்துவிடக்கூடாது.

தோனி சிறப்பாக விளையாடும்போதெல்லாம், சிறந்த பினிஷர் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய ரசிகர்கள், அவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் கூட விமர்சிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

தோனி மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்தவர், ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றும் திறமை படைத்தவர். ஆனால், சில நேரங்களில் அவருக்கு ஆட்டம் எடுபடாமல் போகலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக சரியில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. தோனியின் பேட்டிங் திறமை மீது துளியும் நம்பிக்கை குறையவில்லை. அனைத்து வீரர்கள் மீதும் இதே நம்பிக்கைதான் வைத்திருக்கிறோம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால், தோனி போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள், போட்டியின் நுணுக்கங்களை அறிந்தவர்கள் அவசியம் தேவை. ஆனால், நெருக்கடியான காலகட்டத்தில் அவரின் பேட்டிங் தோல்வி அடையும்போது இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன.

நாங்கள் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தினோம், தொடக்கத்தை அளித்தோம். பேட்டிங்குக்கு நல்ல ஆடுகளமாக இருந்தாலும், மெதுவான ஆடுகளமாக இருந்தது. 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், நெருக்கடியும் அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.

மொயின் அலி, ரஷித் சிறப்பாகப் பந்து வீசினார்கள். 30 ஓவர்களுக்கு மேல் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீச்சு அமைந்திருந்தது.''

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தோனியின் பேட்டிங் திறமை ஒருநாள் போட்டிகளில் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது. கடந்த செப்டம்பரில் இருந்து 13 முறை பேட்டிங் செய்துள்ள தோனி, 267 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் தோனியின் சராசரி 29.66 ஆகும். அதேசமயம், ஒருநாள் போட்டியில் தோனியின் ஸ்டிரைக் ரேட் 78 ஆகும். அவரின் பேட்டிங் வரிசை 7 அல்லது 6க்கு செல்வதன் காரணமாகவே அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

ரோஹித் சர்மா, தவண், கோலி, ராகுல், ரெய்னா ஆகியோருக்குப் பின் 6-வது வீரராக தோனி களமிறங்குகிறார். இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரேனும் ஒருவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நடுவரிசையில் பேட் செய்பவர்களுக்கு ரன் அடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும்போது, நடுவரிசையில் பேட் செய்யும் ரெய்னா, தோனி, ஹர்திக் ஆகியோர் நெருக்கடியைச் சமாளித்து பேட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடாத தோனியின் பேட்டிங்கை விமர்சிப்பதும், கேள்விக்கு உள்ளாக்குவதும் நியாயமில்லை என்று சில ரசிகர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x