Published : 29 Jun 2025 01:34 PM
Last Updated : 29 Jun 2025 01:34 PM
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார் 40 வயதான ரொனால்டோ. அண்மையில் 2027 வரையில் விளையாடும் வகையில் அவரது ஒப்பந்தத்தை அந்த அணி புதுப்பித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காதது குறித்து ரொனால்டோ பேசியுள்ளார்.
அல்-நசர் கிளப் அணி இந்தத் தொடரில் பங்கேற்க தகுதி பெறவில்லை. இருப்பினும் ரொனால்டோ இந்த தொடரில் பங்கேற்க ஃபிபா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இதே தொடரில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார்.
“கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாட எனக்கு சில ஆஃபர்கள் வந்தன. ஆனால், அது அர்த்தமற்றது என நான் கருதினேன். அதனால் சிறந்த முறையில் ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். ஏனெனில், இந்த சீசன் மிகவும் பெரியது. உலகக் கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. இதற்கு சிறந்த முறையில் தயாராக ஓய்வு அவசியம்.
நான் எனது கிளப் அணிக்காக மட்டுமல்லாது தேசிய அணிக்காகவும் விளையாட விரும்பினேன். அதனால் தான் நேஷன்ஸ் லீக் தொடரிலும் விளையாடினேன். வேறு எதற்கும் நான் செவிகொடுக்கவில்லை. அல்-நசர் அணிக்காக பிரதான கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். இது நான் நேசிக்கின்ற ஒரு அணி. அதனால் தான் இப்போது எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நான் சவுதி சாம்பியன் ஆவேன்” என ரொனால்டோ கூறியுள்ளார். இதை வீடியோ வடிவில் சமூக வலைதளத்தில் அல்-நசர் அணி பகிர்ந்துள்ளது.
அல்-நசர் அணிக்காக 105 போட்டிகளில் 93 கோல்கள் பதிவு செய்துள்ளார் ரொனால்டோ. இதுவரை மொத்தம் 932 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதில் 138 கோல்கள் போர்ச்சுகல் அணிக்காகவும், 794 கோல்கள் கிளப் அணிக்காகவும் பதிவு செய்துள்ளார். 1000 கோல்களை பதிவு செய்வது அவரது இலக்காக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT