Published : 29 Jun 2025 08:47 AM
Last Updated : 29 Jun 2025 08:47 AM

ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

பார்படோஸில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 190 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன.

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

டிராவிஸ் ஹெட் 61, பியூ வெப்ஸ்டர் 63, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 65, கேப்டன் பாட் கம்மின்ஸ் 9, மிட்செல் ஸ்டார்க் 16, நேதன் லயன் 13, ஜோஷ் ஹேசில்வுட் 12 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்களைச் சாய்த்தார். இதையடுத்து 301 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடத் தொடங்கியது.

ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்துவீச்சால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் விக்கெட்கள் மளமளவென வீழ்ந்தன. அதிகபட்சமாக ஷமார் ஜோசப் 44, ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்கள் சேர்த்தனர். 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் தனது 2-வது இன்னிங்ஸை இழந்தது. இதைத் தொடர்ந்து 159 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஜோஷ் ஹேசில்வுட் 12 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x