டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா
Updated on
1 min read

நாட்டிங்காம்: டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 62 பந்துகளில் 112 ரன்கள் அவர் எடுத்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணிக்காக ஷெபாலி மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். ஷெபாலி 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹர்லீன் தியோல் உடன் 94 ரன்கள் கூட்டணி அமைத்தார் ஸ்மிருதி. ஹர்லீன், 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

51 பந்துகளில் சதம்: இன்னிங்ஸை அதிரடியாக அணுகிய ஸ்மிருதி 51 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் ஹர்மன்ப்ரீத்துக்கு அடுத்ததாக சதம் விளாசிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி படைத்துள்ளார். மகளிர் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதங்களில் இது 4-வது இடத்தில் உள்ளது. 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஸ்மிருதி ஆட்டமிழந்தார். 15 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

ரிச்சா கோஷ் 12, ஜெமிமா 0 ரன்கள் எடுத்து வெளியேறினர். அமஞ்ஜோத் 3, தீப்தி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்லட் மற்றும் சோஃபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 211 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in