மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து: தஞ்சாவூர், காஞ்சிபுரம் அணிகள் கோல் மழை

மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து: தஞ்சாவூர், காஞ்சிபுரம் அணிகள் கோல் மழை
Updated on
1 min read

சாத்தூர்: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் விருதுநகர் மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் டி.பி.ராமசாமி பிள்ளை கோப்பைக்கான மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சாத்தூரில் நேற்று தொடங்கியது.

தொடக்க நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை 8-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை வீழ்த்தியது. மதுரை அணி தரப்பில் பரத் 3 கோல்களையும் வில்லியம்ஸ், சுஜில் தேவா ஆகியோர் தலா 2 கோல்களையும் சஞ்ஜய் ஒரு கோலையும் அடித்தனர். தூத்துக்குடி அணி சார்பில் கோகுல் ஒரு கோல் அடித்தார்.

திருநெல்வேலி 2-0 என்ற கோல் கணக்கில் நாமக்கல் அணியை வீழ்த்தியது. திருநெல்வேலி அணி சார்பில் ஆல்வின் ஃபெலிக்ஸ், சந்திரமோகன் கோல் அடித்தனர், காஞ்சிபுரம் 8-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் அணியை தோற்கடித்தது. காஞ்சியும் அணி சார்பில் ஜோயல் ஸ்டீபன் 4 கோல்களையும் வெற்றிவேல், நித்ரன் ஆகியோர் தலா 2 கோல்களையும் அடித்தனர்.

தஞ்சாவூர் 13-0 என்ற கோல் கணக்கில் கரூர் அணியை தோற்கடித்தது. தஞ்சாவூர் அணி தரப்பில் பன்னீர் செல்வம் 4 கோல் களையும் தர்ஷன் ராஜ், சக்திவேல் ஆகியோர் தலா 2 கோல்களையும் விஷாகன், ஆல்ரிக், பிரசன்னா, ராகவன், கைலாஷ் சக்தி ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

சேலம் 5-3 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை வீழ்த்தியது. சேலம் அணி சார்பில் ரோஹித், தேவதர்ஷன், ஷுவாஸ். சாய் சச்சின், மனோஜ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். புதுக்கோட்டை அணி தரப்பில் ரித்தீஸ்வரன். சிவநேசன், ஷான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

சிவகங்கை - ஈரோடு அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷுட் அவுட்டில் சிவகங்கை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கடலூரை தோற்கடித்தது. கன்னியாகுமரி அணி சார்பில் கிஷ்மென், ஃபெயின் ஷரோன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கடலூர் அணி தரப்பில் சஞ்ஜய் ஒரு கோல் அடித்தார். அந்த அணியை சேர்ந்த கமலேஷ் சுய கோல் அடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in