‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

‘களத்தில் எனது செயல்பாட்டை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்’ - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Updated on
1 min read

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் தனது முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என நான்கு நாடுகளில் தனது முதல் 5 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

“களத்தில் நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன் என நான் நினைக்கிறேன். ஆனால், அதில் சில ஸ்பெஷலானது. கிரிக்கெட்டில் எப்போதும் சவால் இருக்கும். அது ஒவ்வொரு நிலையிலும் மாறுபடும். எனது செயல்பாட்டில் நம்பிக்கை வைக்கிறேன். கள சூழல், அணிக்கு என்ன தேவை, பந்து வீச்சாளர்களின் திட்டம் போன்றவற்றை இந்த செயல்முறையின் போது கவனத்தில் கொள்வேன்.

ஷுப்மன் கில் உடன் இணைந்து கூட்டணி அமைத்து விளையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. அவர் மிகவும் பக்குவத்துடன் ஆடினார். ஒவ்வொரு செஷனாக இன்னிங்ஸை அணுகுவது எங்கள் திட்டமாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் தங்களது லெந்த்தை மிஸ் செய்யும் பந்தை டார்கெட் செய்தோம்” என ஜெய்ஸ்வால் முதல் நாள் ஆட்டத்துக்கு பிறகு தெரிவித்தார்.

ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் என இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக இங்கிலாந்து அணியின் ஆலோசகர் டிம் சவுதி கூறியுள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் முடிவு விமர்சிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in