பதும் நிசங்கா சதம் விளாசல் இலங்கை அணி 368 ரன் குவிப்பு | SL vs BAN முதல் டெஸ்ட்

பதும் நிசங்கா சதம் விளாசல் இலங்கை அணி 368 ரன் குவிப்பு | SL vs BAN முதல் டெஸ்ட்

Published on

காலே: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கில் பதிலடி கொடுத்தது.

காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 151 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஸ்பிகுர் ரகிம் 163, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 148, லிட்டன் தாஸ் 90 ரன்கள் விளாசினர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 153.4 ஓவர்களில் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நஹித் ரானா ரன் ஏதும் எடுக்காத நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். ஹசன் மஹ்மூத் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்களை வீழ்த்தினார். திலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 368 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பதும் நிசங்கா 256 பந்துகளில், ஒரு சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 187 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு உதரா 29, தினேஷ் சந்திமால் 54, ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கமிந்து மெண்டிஸ் 37, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 17 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத், தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், மொமினுல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 127 ரன்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in