Published : 25 Aug 2014 12:00 PM
Last Updated : 25 Aug 2014 12:00 PM

உலகக் கோப்பை வரை பிளெட்சர்தான் பயிற்சியாளர்: கேப்டன் தோனி பேட்டி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்திய அணிக்கு டங்கன் பிளெட்சர்தான் பயிற்சியாளராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி கூறியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்ததை அடுத்து பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டுமென்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.

எனினும் இது தொடர்பாக எவ்வித கருத்தையும் தெரிவிக்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் ஆலோசகர் ஆகியோரை நீக்கியது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரவி சாஸ்திரியை இந்திய அணியின் இயக்குநராக நியமித்தது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் தோனி இது தொடர்பாக கூறியிருப்பது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை பிளெட்சர்தான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். அணியை முழுமையாக மேற்பார்வையிடவே ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் பயிற்சியாளர் பிளெட்சர்தான். புதிய நியமனத்தால் அணியில் பிளெட்சருக்கு எந்த அதிகாரமும் குறைக்கப்படவில்லை.

அணிக்கு வெளியே இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அணிக்கு உள்ளே முன்பு இருந்ததுபோன்ற ஒரே நிலைப்பாடுதான் தொடர்கிறது. அணியின் ஆலோசனை மற்றும் பயிற்சிக் குழுவில் கூடுதலாக ஒரு சிலர் வந்துள்ளனர் என்பது மட்டுமே மாற்றம் என்றார். இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பாங்கர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாரத் அருண், ஆகியோர் துணை பயிற்சியாளர்களாகவும், ஆர். ஸ்ரீதர் பீல்டிங் பயிற்சியாளாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தோனி, டெஸ்ட் போட்டிகளில் சில கேட்ச்களை நாங்கள் கோட்டைவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இனி பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம். புதிதாக அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளவர்களுக்கு நாங்கள் எப்படி விளையாட்டு முறையை அமைத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்வதற்காக சிறிது கால அவகாசம் அளித்துள்ளோம். அதன் பிறகு அவர்கள் தங்கள் உத்திகளை எங்களுக்கு கூறுவார்கள்.

ரவி சாஸ்திரி அணியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம்தான். அவர் ஒட்டுமொத்தமாக அணியின் நடவடிக்கைகளை கண்காணிப்பார் என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x