

சேலம்: டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 151 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் சார்பில் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பந்தை உலரச் செய்வதற்கு வழங்கப்படும் துண்டுகளில் வேதியல் திரவத்தை பயன்படுத்தி பந்து சேதப்படுத்தப்பட்டதாக அந்த அணி தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கேள்விக்குரிய துண்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டவை. இவை இரு அணிகளுக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நடுவர்கள் மற்றும் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு போட்டி முழுவதும் பந்தை முழுமையாக மேற்பார்வையிட்டது. ஆட்டத்தின் போது எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. மேலும் குற்றச்சாட்டை சரிபார்க்கக்கூடிய எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. கூற்றுக்கள் ஊகமாக உள்ளன. எனினும் புகார் கூறியுள்ள மதுரை அணி நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டிருந்தால் ஜூன் 17 (இன்று) பிற்பகல் 3 மணிக்குள் சுயாதீன விசாரணை ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கலாம் என்று டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.