அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

Published on

லண்டன்: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

வியாழக்கிழமை (ஜூன் 12) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் கனவுகள் கருகி உள்ளன.

இந்த விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். உலக தலைவர்களில் டொனல்டு ட்ரம்ப், புதின், ஷெபாஸ் ஷெரீப், ஸ்டார்மர் என பலர் தங்களது வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், லண்டன் நகரின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 282 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டி வருகிறது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட வான் சூழல் விலகி வெயிலின் தாக்கம் லேசாக தற்போது லண்டனில் உணரப்படுகின்ற காரணத்தால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் பவுலர் ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதே போல இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் அங்கு பயிற்சிக்காக முகாமிட்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பெக்கன்ஹாமில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in