Published : 20 Jul 2018 05:47 PM
Last Updated : 20 Jul 2018 05:47 PM

புதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு

புலவாயோ நகரில் நடந்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் 210 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமன், இமான் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யாத சாதனையாகும்.

50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.

ஜிம்பாப்வே நாட்டுக்கு பாகிஸ்தான் அணி பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அனைத்திலும் வென்று பாகிஸ்தான் அணி 3-0 என்று முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், புலவாயோ நகரில் இன்று 4-வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இமாம் உல் ஹக், பக்கர் ஜமன்ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியைக் கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். பக்கர் ஜமன் 51 பந்துகளில் அரை சதத்தையும், இமாம் உல் ஹக் 69 பந்துகளில் அரை சதத்தையும் எட்டினார்கள்.

பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 100 ரன்களையும், 31 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது. பக்கர் ஜமன் 92 பந்துகளில் சதத்தை எட்டினார். இமாம் உல் ஹக் 112 பந்துகளில் சதம் அடித்தார்.

இருவரின் ஆட்டத்தைப் பார்த்தபோது, அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, 42 ஓவரில் பாகிஸ்தான் அணி 300 ரன்களை எட்டியது.

சதம் அடித்த இமாம் உல் ஹக் 113 ரன்கள் சேர்த்து மசகாட்சா ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

முதல் விக்கெட்டுக்கு பக்கர் ஜமன், உல் ஹக் இருவரும் 304 ரன்கள் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்தனர். இதுவரை முதல் விக்கெட்டுக்கு இலங்கை வீரர் ஜெயசூர்யா, தரங்கா ஆகியோர் 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் 286 ரன்கள் சேர்த்தே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பக்கர் ஜமன், இமாம் உல் ஹக் முறியடித்தனர்.

சதம் அடித்தபின் அதிரடியாக பேட் செய்த பக்கர் ஜமன் 115 பந்துகளில் 150 ரன்களையும், 148 பந்துகளில் 200 ரன்களையும் எட்டினார்.

2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆசிப் அலி ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தது. பக்கர் ஜமன் 210 ரன்களுடன்(156 பந்துகள், 24 பவுண்டரி, 5 சிக்ஸர்), ஆசிப் அலி 50 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் வீரர் சாதனை…

சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், எந்த ஒருபாகிஸ்தான் வீரரும் இரட்டை சதம் இதுவரை அடிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் கடந்த 1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை முறியடித்த பக்கர் ஜமன் முதல்முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 17 போட்டிகளில் விளையாடியுள்ள பக்கர் ஜமான் 980 ரன்கள் சேர்த்துள்ளார். ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 20 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதை அடுத்த போட்டியில் எட்டிவிட்டால், உலகில் அதிகவேகமாக, குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பக்கர் ஜமன் பெறுவார்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை ஒருநாள் அரங்கில் இரட்டை சதத்தை 5 பேர் மட்டுமே அடித்துள்ளனர். அதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 3 இரட்டை சதங்களையும், சச்சின், சேவாக் தலா ஒருமுறையும், மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ்கெயில் ஒருமுறையும், நியூசிலாந்து வீரர் கப்தில் ஒருமுறையும் இரட்டை சதம் அடித்துள்ளனர். அதில் 6-வது வீரராகப் பக்கர் ஜமன் இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x