Published : 10 Jun 2025 06:33 AM
Last Updated : 10 Jun 2025 06:33 AM
முனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி உட்புற பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
அடுத்த 5 நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் பெட்ரோ நீட்டோ உதவியுடன் பந்தை பெற்ற நூனோ மென்டெஸ் பாக்ஸின் இடது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையின் வலது கார்னரை நோக்கி பாய்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
45-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெட்ரி விரைவாக கடத்திக் கொடுத்த பந்தை பெற்ற மைக்கேல் ஓயர்சபால், பாக்ஸின் மைய்பகுதியில் இருந்து கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திரமான கிறிஸ்டியானானோ ரொனால்டோ இலக்குக்கு மிக அருகில் நின்றபடி கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதன் பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பெனால்டி ஷுட்அவுட்டில் போர்ச்சுகல் அணி தரப்பில் கோன்கலோ ராமோஸ், விடின்ஹா, புருனோ பெர்னாண்டஸ், நுனோ மெண்டீஸ், ரூபன் நெவ்ஸ் ஆகியோர் தங்களது வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினர்.
ஸ்பெயின் அணி சார்பில் மைக்கேல் மெரினோ, அலெக்ஸ் பேனா, இஸ்கோ ஆகியோர் தங்களது வாய்ப்பில் கோல் அடித்தனர். அல்வாரோ மொராட்டா அடித்த பந்தை போர்ச்சுகல் அணியின் கோல்கீப்பர் டியோகோ கோஸ்டா கோல் விழவிடாமல் தடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT