Published : 09 Jun 2025 06:30 AM
Last Updated : 09 Jun 2025 06:30 AM
சீன தைபே: தைவான் ஓபன் சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் ஒரே நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கம் வென்றனர்.
தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபே நகரில் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் நடப்பு ஆசிய சாம்பியனும் இந்திய வீராங்கனையுமான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பூஜா பந்தய தூரத்தை 4.11.65 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்சா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
ஆடவருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் அடங்கியஅணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியனான அப்துல்லா அபுபக்கர் தங்கத்தைக் கைப்பற்றினார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜஸ் சிர்சே தங்கம் வென்றார். இதன்மூலம் முதல் நாளிலேயே இந்தியா,6 தங்கம் வென்று அசத்தியது. இந்நிலையில் நேற்று 2-ம் நாள் போட்டிகள் நடைபெற்றன. 2-ம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் யஷஸ் பலாக்சா 42.2 விநாடிகளில் ஓடிவந்து வெள்ளி வென்றார்.
மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.53 விநாடிகளில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வித்யா ராம்ராஜ், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் இதே பிரிவில் 56.04 விநாடிகளிலும், ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 56.46 விநாடிகளிலும் பந்தய தூரத்தைக் கடந்துவந்திருந்தார் வித்யா ராம்ராஜ்.
இதேபோல், ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரோஹித் யாதவ் 74.42 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மகளிர் 800 மீட்டர் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 2:02:79 விநாடிகளில் ஓடிவந்து முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி2:06.96 விநாடிகளில் ஓடி வந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளியை வென்றார்.
ஆடவர் 800 மீட்டர் பிரிவில்இந்திய வீரர் கிருஷண் குமார் 1:48.46 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 56.82 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இலங்கை வீராங்கனை ஹடாராபாகே லேகமலேகே 2-வது இடத்தையும், சீன தைபே வீராங்கனை பின்-சுன் சு 3-வது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் 6.41 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி வென்றார். இதே பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை டெல்டா அமிட்சோவ்ஸ்கி (6.49 மீட்டர்) தங்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை அன்சி சோஜன் (6.39 மீட்டர்) வெண்கலமும் வென்றனர். கடைசி நாளில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT